“10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்யப்படும்” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல்…

புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பொதுத்தேர்வு முடிவுகளை இன்று சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட்டனர்.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 89.12% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 88.85% மாணவர்களும், 93.30% மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.8% குறைவாகும். அரசு பள்ளிகளை பொருத்தவரை 78.92% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 7 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் கணிதப்பாடத்தில் 61 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 49 மாணவர்களும், சமூக அறிவியலில் 19 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ”பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வரும் கல்வியாண்டு முதல் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 116 அரசு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் துவங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க பயிற்சி அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் எனவும், அடுத்த ஆண்டு 100% தேர்ச்சியை நோக்கி அரசு சிறந்த கல்வியை கொடுக்க முயற்சி எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.