நான் 13 வருடங்களுக்கு மேலாக இரவு உணவு சாப்பிடுவதில்லை – நடிகர் மனோஜ் பாஜ்பாய்!

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், தான் 13-14 ஆண்டுகளாக இரவு உணவு உண்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.  ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸேபூர்’, ‘ஃபேமிலி மேன்’ மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் பாலிவுட் நடிகர்…

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், தான் 13-14 ஆண்டுகளாக இரவு உணவு உண்பதில்லை என்று தெரிவித்துள்ளார். 

‘கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸேபூர்’, ‘ஃபேமிலி மேன்’ மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய். அவர் நடித்துள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் மே 23-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தனது வழக்கமான உணவு பழக்கவழக்கங்கள் குறித்து பேசிய நடிகர் மனோஜ் பாஜ்பாய், “நான் இரவு உணவை சாப்பிட்டு 13-14 வருடங்கள் ஆகிவிட்டது என நினைக்கிறேன். என்னுடைய தாத்தா நல்ல உடல் வலுவுடன் இருப்பார். அவரைப் போலவே நானும் இருக்க வேண்டும் என நினைத்து, அதற்காக அவர் என்ன சாப்பிடுகிறார், எப்படி சாப்பிடுகிறார் என்பதை பின்தொடர்ந்தேன். அவரின் உணவுப் பழக்கங்களை நான் பின்தொடரத் தொடங்கியதும் எனது உடல் எடை குறைந்தது. புத்துணர்ச்சியாக உணர்ந்தேன். நீரிழிவு நோய், இதயம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த முறை பெரும் உதவியாக இருந்தது” என்று கூறினார்.

வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு அல்லது வயிறை காலியாக வைத்துவிட்டு உறங்கச்செல்வதை விடவும், மிகவும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டுவிட்டு தூங்குவது சிறந்தது என்பதே பொதுவாக மருத்துவர்கள் மற்றும் உணவு முறை நிபுணர்களின் பரிந்துரையாக உள்ளது. இரவு உணவை தவிர்ப்பது என்று முடிவு செய்துவிட்டால், அதனை சரியான முறையில் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கலாம். உடல் ஆரோக்கியம் அல்லது உடல் எடைக்காக ஏதேனும் ஒருவேளை உணவை தவிர்ப்பதாக இருந்தால், காலை உணவை தவிர்ப்பதற்கு பதிலாக இரவு உணவை தவிர்க்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.