கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கருத்துகள் மனுவாக பெறப்பட்டு கூட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் படி இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில்
தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக முதல் கருத்து கேட்பு கூட்டம் நெல்லை
பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டமனாது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆதீனம் மருதாச்சல அடிகளார்,
சுகி சிவம் உள்ளிட்டோர் தலைமையில் நடைப்பெற்றது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள், இந்து ஆர்வலர்கள், சிவனடியார்கள் என பலரும் இந்த கூட்டத்தில்
பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியவுடன், இந்து அறநிலையத்துறை கூட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் இந்து கடவுள் படங்கள் எதுவும் ஏன் இடம்பெறவில்லை என்று கூறி ஒரு தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பல்வேறு இந்து ஆர்வலர்களும் கடவுள் படம் வைக்க கோரி கூச்சல்
குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடவுள்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டதையடுத்து மீண்டும் கூட்டம்
தொடங்கிய நிலையில், தமிழில் குடமுழுக்கு நடத்த கூடாது என்று ஒரு தரப்பினரும்,
சமஸ்கிருத்தில் இருக்க கூடாது என மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து கூச்சலிட்டு
வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் கூட்டம் முறையாக நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, கூட்டத்திற்கு வந்தவர்கள் தங்கள் கருத்துகளை மனுவாக குன்றகுடி
அடிகளாரிடம் அளித்து சென்றனர்.







