அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஊதிய உயர்வு வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மிகக்குறைவான ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கும் உணவகங்கள், தரமான சமையல் உபகரணங்கள் இல்லாததால் உணவின் தரம் குறித்து அவ்வப்போது எழும் பல்வேறு விமர்சனங்கள் என அவலங்களுக்கு மத்தியில் அம்மா உணவகங்கள் இயங்கி வரும் நிலையிலும், இவை அனைத்தையும் சீர்செய்ய வலியுறுத்தி ஊழியர்களின் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் சூழலிலும், தவெக ஆட்சிக்கு வந்தபின்பு 630 அம்மா உணவகங்களைச் சீரமைத்து செயல்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாகப் பச்சையாகப் பொய் சொல்வதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாய் கூசவில்லையா?
ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகங்களைச் சீரமைக்கவும், மக்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்கவும் உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், தான் பிறப்பித்த உத்தரவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை என்றாவது ஆய்வு செய்திருக்கிறாரா? அல்லது அதிகாரிகளிடம் தான் கேட்டறிந்திருக்கிறாரா? இவற்றில் எதையுமே செய்யாமல், அம்மா உணவகங்களை மேம்படுத்திவிட்டதாகப் பொய் பேசியிருப்பது ஏழை மக்களை வாக்கு அரசியலுக்காக ஏமாற்றும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு, அங்கு உணவு அருந்த வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தரமான மற்றும் சுவையான உணவினை வழங்கி, தேவையான அனைத்து விதமான வசதிகளையும் உண்மையாகச் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




