“பழங்குடியினர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்த கிராமப் பஞ்சாயத்தின் முன் அனுமதி கட்டாயம்” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

பழங்குடியினர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு கிராமப் பஞ்சாயத்தின் முன் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தின் பழங்குடியினர்களின் கிராமப் பகுதிகளில் டால்மியா சிமெண்ட் நிறுவனம் தனது ஆலைக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

அதில், நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் வெளிப்படைத் தன்மைக்கான உரிமைச் சட்டம் 2013ன் கீழ், பழங்குடியினர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு முன்பு கிராமப் பஞ்சாயத்தின் முன் அனுமதியை கட்டாயம் பெறப்பட வேண்டும் எனவும், அதை பூர்த்தி செய்யத் தவறினால் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் செல்லாததாகிவிடும் என்றும் தீர்ப்பளித்தனர்.

அதுபோல, இந்த விவகாரத்தில் முன் ஒப்புதல் தேவை என்பது ஒரு வழிகாட்டுதல் மட்டுமே என்று தீர்ப்பளித்த ஒரிசா உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்வதாகவும், ஒப்புதல் தேவை என்பது ஒரு வழிகாட்டுதல் மட்டுமே என்ற உயர் நீதிமன்றத்தின் வாதத்துடன் உடன்படவில்லை என்றும், உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒரு கட்டாய சட்டப்பூர்வத் தேவையை வெறும் காகித சம்பிரதாயமாகச் சுருக்கிவிடும் விளைவைக் கொண்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் ஆரம்பத்திலேயே நிலம் கையப்படுத்தும் முன்மொழிவை வெளிப்படையாக நிராகரித்துவிட்ட போதிலும், ஆலை நிர்வாகம் சட்டத்துக்கு புறம்பான வழியில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறிய நீதிபதிகள், ஒரு தனியார் நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பட்சத்தில், அரசு கையகப்படுத்தும் திட்டத்தைப் பரிசீலிப்பதற்கு முன்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களில் குறைந்தது 80% பேரின் ஒப்புதல் சமூக தாக்க மதிப்பீட்டுடன் பெறப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தனர்.

அதுபோல, ஒரு சுரங்கக் குத்தகையானது மூன்றாம் தரப்பு நில உரிமையாளர்களின் தனியுரிமைகளை பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் சட்டப்படியுள்ள பாதுகாப்புகளைத் தளர்த்தவும் முடியாது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், டால்மியா சிமெண்ட் ஆலை மேற்கொண்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.