“போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை மாதவரம் பகுதியில் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மத்திய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

இதன் சந்தை மதிப்பு 700 கோடி ரூபாய் வரை இருக்கும் என வருகின்ற செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

போதைப்பொருளை ஒழிப்பதில் இன்றைய முதல்வர் தலைமையிலான அரசு தீவிரமாக இருப்பதாக டிஜிபி பிரஸ் மீட் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் இவ்வளவு பெரிய Drug Movement தலைநகரில் நடந்திருக்கிறது என்றால், டிஜிபி விடுத்த எச்சரிக்கைக்கோ, இன்றைய முதல்வரின் அரசின் மீதோ கொஞ்சம் கூட போதை மாபியாவுக்கு பயமே இல்லை என்று தானே இதைப் பார்க்க வேண்டும்?

மாநில அரசின் காவல்துறையோ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவோ இதை பறிமுதல் செய்திருந்தால் கூட, “ஆஹா… இந்த அரசு சொன்ன மாதிரியே Action-இல் இறங்கிவிட்டதே” என்று பாராட்டி இருக்கலாம். ஆனால், இந்த போதைப்பொருளைப் பிடித்தது மத்திய அரசின் DRI அமைப்பு!

ஆளுகின்ற மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத லட்சணத்தில் தான் இன்றைய மாநில அரசும், காவல்துறையும், அதற்கு பொறுப்பான முதல்வரும் இருக்கிறார்கள்.

போதைப்பொருள் தடுப்புப் படைக்கென பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ. 264 கோடியை வைத்து என்ன செய்தீர்கள் முதலமைச்சர்?

தமிழ்நாட்டில் 70 கிலோ ஹெராயின் என்பதெல்லாம் இதுவரை நாம் கேள்விப்படாத அளவிலான வெட்கக்கேடான செய்தி.

டி-ஷர்ட் ஒன்றைப் போட்டுக்கொண்டு காமராஜர் சாலையில் நீங்கள் Jogging போனதும் போதைப் பொருள் ஒழிந்துவிட்டது என்று நினைத்துவிட்டீர்களா?

எல்லாவற்றையும் சினிமா கண்ணோட்டத்தில் பார்த்து,
“Start Camera Action” என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிட்டு, Serious-ஆன இந்த போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.