பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் – எதிர்ப்புக் குழுவினர் உறுதி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஏகனாபுரம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள…

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஏகனாபுரம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஏகனாபுரம் குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நலச்சங்கத்தினருடன் 2வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர். 13 கிராம மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அரசு சார்பாக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர், விமான நிலையத்துக்காக கையகப்படுத்தும் 4 ஆயிரத்து 800 ஏக்கரில், 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம், விவசாய நிலம் என்று கூறினார். தங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக அமைச்சர்கள் கூறியதாகவும் தெரிவித்தனர். மேலும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, விமான நிலையம் வர வேண்டும் என்றும், அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்றும் தெரிவித்தார். தங்கள் தொகுதி மக்களை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.