டெல்லியில் மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் தலைமையில் போராட்டம்!

டெல்லியில் மத்திய அரசுக்கு கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  இதில் 2 மாநில முதலமைச்சர்கள் உட்பட எம்பிக்கள்,  அமைச்சர்கள் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.  மத்திய அரசு மற்றும்…

டெல்லியில் மத்திய அரசுக்கு கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  இதில் 2 மாநில முதலமைச்சர்கள் உட்பட எம்பிக்கள்,  அமைச்சர்கள் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 

மத்திய அரசு மற்றும் கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு இன்று போராட்டம் நடத்தியது.

இந்த போராட்டம் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்,  பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போராட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் .  அதேபோல திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  எம்பிக்கள் திருச்சி சிவா,  எம்எம்.அப்துல்லாஹ் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு அளிக்கும் விதமாக கலந்து கொண்டனர்.

இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளார் டி.ராஜா,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் சீதாராம் யெச்சூரி,  தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது..

“ மாநிலங்களைப் பாதிக்கும் பிரச்னைகளில்,  மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல், அவர்களின் ஒப்புதலைப் பெறாமல் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.  இவைதான்  மாநிலங்களின் உரிமைகள் எவ்வாறு நசுக்கப்படுகின்றன என்பதற்கும்,  இந்தியா எவ்வாறு ஜனநாயகமற்ற  முறையில் ‘மாநிலங்களுக்கு மேல் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு உதாரணமாகும்.

கூட்டாட்சி தத்துவம் என பூசி மெழுகும்  மத்திய அரசும்,  அமைச்சர்களும் மாநிலங்களுக்கு நிதி ஆயோக் மூலம் ஒதுக்க வேண்டிய நிதியை குறைக்க முயற்சி செய்கின்றனர்.  அதே போல சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் கூட, மூலதனச் செலவினங்களுக்காக வழங்கப்படும்  கடன்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அவை  மாநிலங்களை மேலும் நெருக்குதலுக்கு உள்ளாக்குகின்றன. “

இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.