பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அணிந்து வரக்கூடிய உடை குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது.
சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21வது பட்டமளிப்பு விழா, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும், கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு, சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
தொடர்ந்து சேலம் மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பெரியார் பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்து வருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ள பணிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : கனகசபை மீது ஏறிய அறநிலையத்துறையினர் – குறும்படம் வெளியிட்ட சிதம்பரம் தீட்சிதர்கள்!!
பெரியார் பல்கலைக்கழகம் சேலம் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் அமைந்துள்ளது. எனவே, மேற்படி இடத்தில் நடைபெறும் விழாவில் பங்குபெறுபவர்கள் கடைபிடிக்க வேண்டியது குறித்து சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என்று விளக்கமளித்துள்ளது.







