எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 37 மருத்துவக்கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி முதல் ஜூலை 10 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tnhealth.tn.gov.in மற்றும் http://www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.







