நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம், ஒரு விழிப்புணர்வு கதையாக கூட இருக்கலாம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். தொடர்ந்து நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் விஜய் படங்கள் மட்டும் ஏன் இப்படி சர்ச்சையாகின்றன என தெரியவில்லை என்று கூறினார்.
புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை தான் ஊக்கப்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்த எம்பி விஜய் வசந்த், படத்தின் கதைக் களத்தையும் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறினார். மேலும், லியோ திரைப்படம், ஒரு விழிப்புணர்வு கதையாக கூட இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். திரைப்படங்களை கலை நயத்தோடு பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், படத்தை வெறும் படமாக மக்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படியுங்கள் : எதிர்ப்பு எதிரொலி – கறுப்பு உடைக்கு விதித்த தடையை வாபஸ் பெற்றது பெரியார் பல்கலைக்கழகம்!!
தனக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் ஏராளம் வந்தாலும், தான் நடிக்க மாட்டேன் என்ற முடிவில் இருப்பதாக தெரிவித்த விஜய் வசந்த், செய்யவேண்டிய மக்கள் பணிகள் அதிகம் இருப்பதாக கூறினார். மேலும் திரைப்பயணத்தை நிறுத்திவிட்டு, 2024 தேர்தல் பணிகளில் முழுவதுமாக இறங்கப் போவதாகவும் அவர் கூறினார்.







