இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவ தாக்குதல் நடத்தி வருவதால், மேற்காசிய நாடுகளில் பதட்டம் நிலவி வருகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாக சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எரிபொருள் தட்டுபாடு பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பயன்படுத்திக் கொண்டு சமையல் எரிவாயு விலை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு, பல முறை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் 19 கிலோ எடை கொண்ட, வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 46 உயர்த்தப்பட்டு , ரூபாய் 3283 க்கு விற்கப்படுகிறது. இதனால் உணவகங்கள், தொழிலகங்கள் மேலும் மூடப்பட்டு வருகின்றன. ஒரு கோப்பை டீ யின் விலை 50 விழுக்காட்டிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும் ஒன்றிய அரசின் தவறான, தனியார் எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு சாதகமான எண்ணெய் விலை நிர்ணயக் கொள்கையும், வரிகளுமே காரணாமாகும். இந்த விலை உயர்வுக்கு மத்திய பாஜக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 04.06.2026 வியாழன் அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




