“உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குக” – அண்ணாமலை

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா 50 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வீதி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் முரசு புயலில் சிக்கி உயிரிழந்தனர். இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் தலா ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவித்தார். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தார்.

இந்த நிலையில், உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவியைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வீதி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ முதல்வர் விஜய் அவர்களின் கவனத்திற்கு,காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம்: மீனவர்களின் பாதுகாப்பில் புதிய அணுகுமுறையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உரிய வாழ்வாதார உத்தரவாதமும் அவசியம்!

உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவியைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதில், 25 லட்சம் ரூபாயை உடனடி நிவாரணமாக வழங்குவதுடன், மீதமுள்ள 25 லட்சம் ரூபாயை அந்தந்தக் குடும்பத்தினரின் பெயரில் நீண்டகால வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும். அந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய், குடும்பத்தின் அன்றாடத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நிலையான நிதி ஆதாரமாக அமையும்.

மேலும், குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பாதுகாக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாட்டையும் உருவாக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விச் செலவுகளுக்கு அரசு சிறப்பு உதவித் திட்டம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும்.”

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.