இசைஞானி இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்,
“இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







