பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் இணையவழி பண மோசடிகளைத் தடுப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. ‘In Re: Victims of Digital Arrest Related to Forged Documents’ என்ற பெயரில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவில் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவு!
டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் அது தொடர்பான இணையக் குற்றங்களைத் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை வாட்ஸ்அப் (Meta நிறுவனம்) உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தங்களது தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திடமும் (Indian Cybercrime Coordination Centre – I4C) ஒரே நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு!
டிஜிட்டல் பண மோசடிகளைத் தடுப்பதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பொறுப்பு குறித்தும் உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. வங்கிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதாலோ, சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து தடுக்கத் தவறியதாலோ மோசடி நடைபெற்றிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதற்கான உரிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி (RBI) உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் பிற இணையவழி நிதி மோசடிகளால் பாதிக்கப்படுவோருக்கு, அவர்கள் இழந்த தொகைக்குக் குறையாத அளவில் உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யும் விதிமுறைகள் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் பட்டியல்: RBI-க்கு உத்தரவு!
மேலும், நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகச் செயல்படுத்துவதற்காக, இந்தியாவில் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களின் பட்டியலையும் அடுத்தகட்ட விசாரணைக்கு முன்பாகத் தாக்கல் செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இணையக் குற்றங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் ரூ.800 கோடி பணத்தைப் பொதுமக்கள் இழந்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு வங்கிகள் ஒரு பாதுகாப்புக் குடையாகச் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குப் பரிவர்த்தனை விவரங்கள் வங்கிகளிடம் இருப்பதால், சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்களைக் கண்டறிந்து, மோசடிப் பணம் கணக்கிலிருந்து வெளியேறுவதற்கு முன்பே அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் வலியுறுத்தியுள்ளார்.




