தூத்துக்குடியில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டம்

போக்குவரத்து நெரிசலால் தாமதமாக வரும் மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், மாநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

போக்குவரத்து நெரிசலால் தாமதமாக வரும் மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், மாநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்வோர் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்துகள் கால தாமதமாக வருவதால், கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கால தாமதமாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை கல்லூரி நிர்வாகம் கருத்தில் கொள்ளாமல், கால தாமதமாக வரும் மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுப்பதுடன், வெளியே நிற்க வைப்பதால் மாணவர்களின் கல்வியானது கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : பிரதமர் வேட்பாளர் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெறக் காரணம் என்ன?:

இந்நிலையில், வ.உசி கல்லூரியின் முன்பு, இந்திய மாணவர் சங்கம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த மாணவ, மாணவிகள் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மாவட்ட ஆட்சியர் ஆலுவலகம் முற்றுகையிடப்படும் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

– வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.