இந்திய அரசியலை தீர்மானித்த, தீர்மானிக்கப் போகும் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் மூலம் பிரதமர் வேட்பாளருக்கான பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயரும் இணைந்துள்ளது. பிரதமர் வேட்பாளர் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயர் இடம் பெறக்காரணம் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இதுவரை ”நாளும் நமதே நாற்பதும் நமதே” என முழங்கி வந்த திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தன்னுடைய பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் ”நாற்பதும் நமதே நாடும் நமதே” என சூளுரைத்து உரையை நிறைவு செய்திருக்கிறார். அவரின் நிறைவுரையில் இருந்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை தொடங்கியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியான முதலே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான வியூகத்தை அரசியல் விமர்சகர்கள் கணிக்க தொடங்கிவிட்டனர்.
இதையும் படியுங்கள் : ’கை’ வசமானது ஈரோடு கிழக்கு – ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி
கணிப்பை போலவே 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் யார் தலைமை என்பதை பற்றி பேசாமல், எதிரணிகள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதையே பிரதானமாக பேசினர். அதனை உறுதிபடுத்தும் விதமாக தமது பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதலமைச்சர் தொடங்கி விட்டதாகவும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய அரசியலை தம்மை சுற்றியே சுழறவைத்த கருணாநிதியின் மகன், தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளை கைப்பற்றி இந்திய அளவில் மூன்றாம் பெரிய கட்சி என்பதற்கான அந்தஸ்தை பெற வைத்தவர் என்பதையெல்லாம் தாண்டி, மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் அசூர பலம் வாய்ந்த பாஜகவை திடமாக எதிர்க்கும் தலைவர் என்பதால் மு.க.ஸ்டாலின் பெயர் பிரதமர் வேட்பாளரின் பட்டியலில் இடம்பெறுவதற்கான காரணமாக கூறப்படுகிறது.
அனைத்து தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவை கட்டமைக்க முன்வர வேண்டும் என ஃபரூக் அப்துல்லாவும், எதிர்க்கட்சித் தலைவர்களிடையே ஒற்றுமையை உருவாக்க மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பேசியதன் மூலம் தேசிய அரசியலில் மு.க.ஸ்டாலினின் முக்கியத்துவத்தை அனைவராலும் உணர முடிகிறது. தலைவர்களின் உரைக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் தமிழ்நாட்டை போல ஒற்றுமையான கூட்டணியை இந்தியா முழுமைக்கும் அமைக்க வேண்டும் என பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாம் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதையும் உறுதி செய்துள்ளார்.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பலரும் தயங்கிய நிலையில் ராகுல் காந்தியை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து பிரதமர் வேட்பாளராக, முதல் ஆளாக முன்மொழிந்தவர் மு.க.ஸ்டாலின். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய தலைவர்களின் பார்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்ப தொடங்கியுள்ளது. மூன்றாவது அணி வெற்றிக்கு உதவாது என்பதை உணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் ஓரணியில் திரள முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளனர். தேர்தலுக்கு ஓராண்டு காலமே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது.
– விக்னேஷ், நியூஸ் 7 தமிழ்.









