சிவகங்கை ரயில் நிலையத்தை கடந்து செல்லும் அனைத்து ரயில்களும், அங்கு நின்று செல்லக்கோரி கடை அடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை வழியாக ஏராளமான பயணிகள் ரயில் கடந்து செல்லும் நிலையில் ஒரு சில ரயில்களை தவிர மற்ற ரயில்கள் நின்று செல்வதில்லை. மேலும் தெற்கு ரயில்வே சார்பில் அண்மையில் இயக்கப்பட்டு வரும் பல்லவன் ரயிலும், காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக சிவகங்கையை கடந்து செல்லும் அனைத்து ரயில்களையும், சிவகங்கை ரயில் நிலையத்தில் நிறுத்தக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தெற்கு ரயில்வே கண்டு கொள்ளவில்லை எனக்கூறி தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதையும் படியுங்கள் : நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!
இதனிடையே, சிவகங்கை ரயில் நிலையத்தில் பொதுமக்கள், அனைத்து கட்சியினர், வியாபாரிகள் சார்பில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்தை முற்றுகையிட்டும், பயணிகள் ரயிலை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பேசிய சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் அடுத்தக்கட்ட போராட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டார்.







