தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் சொத்து வரியை உயர்த்த பரிந்துரைத்தபோது கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் தற்போது இரவோடு இரவாக அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்ட பம்பர் பரிசுகள் மக்களுக்கு காத்திருப்பதாக விமர்சித்த ஜெயக்குமார், வரியை உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி தான் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அரசு எதற்கு என கேள்வி எழுப்பினார்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாநகராட்சிகளில் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.
சொத்துவரி உயர்வு, சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது என்றும், வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும் என குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அவதி அடைந்துவரும் பொதுமக்கள், சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் கடுமையாக பாதிக்கப்படுவர் என பதிவிட்டுள்ளார்.
Advertisement: