படத்தின் வெற்றிக்காக பரிசு தரலாமா என விஜய் சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘எனக்குதான் சம்பளம் தருகிறீர்களே அதுவே போதும் என விஜய் கூறியதாக லியோ படத் தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம், நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான ‘லியோ’ திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டுள்ளது.
ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும், பைரசி தளங்களில் லியோ திரைப்படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். உலகளவில் 6000 திரைகளில் வெளியான ‘லியோ’திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2023-ல் உலக அளவில் அதிக வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் எனும் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமான தெரிவித்துள்ளது.
ஒரு படம் வெற்றி பெற்றால் படத்தின் நாயகன், இயக்குநர்களுக்கு கார் அல்லது பரிசுத் தொகை தரும் பழக்கம் விக்ரம், ஜெயிலர் படங்களுக்கு நடந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.
இந்நிலையில், லியோ படத் தயாரிப்பாளர் லலித் நேர்காணல் ஒன்றில், “படத்தின் வெற்றிக்காக பரிசு தரலாமா என விஜய் சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘எனக்குதான் சம்பளம் தருகிறீர்களே அதுவே போதும். தேவையில்லாத பரிசுகள் எதற்கு?’ எனக் கேட்டார். ஆனாலும் லியோ வெற்றிக்காக மீண்டும் ஒருமுறை விஜய் சாரிடம் கேட்பேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜிடமும் என்ன பரிசு வேண்டுமெனக் கேட்பேன்” எனக் கூறியுள்ளார்.








