மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் அக்டோபர் 23-ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை பகுதியை ஆண்ட அரசி வேலுநாச்சியாரின் படை தளபதிகளாக இருந்து, சிவகங்கை மண்ணை ஆண்டவர்கள் மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள். 1758 முதல் 1801 வரை தங்களது போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். 1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி சிவகங்கையின் திருப்பத்தூரில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 3 நாட்கள் கழித்து இவர்களது உடல்களை இவர்கள் கட்டிய காளையார் கோவிலுக்கு எதிர்புறமாக அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மருது சகோதரர்களின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. சமுதாய மக்களின் சார்பில் காளையார்கோவிலில் 27 ந்தேதி குருபூஜை விழா கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்த, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் காளையார்கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்த வரவுள்ளனர்.மேலும் அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவும் அனுசரிக்கப்படும் நிலையில் அங்கும் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அந்த சமூதாய மக்கள் சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அதன் காரணமாக இந்த விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் வருகிற 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின்பேரில் ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.
A.SOWMIYA APPARSUNDHARAM









