பிரியங்கா காந்தியின் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதைத்தொடர்ந்து, பிரியங்கா காந்தியும் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக அவர் தமிழகம் வரும் சுற்றுப்பணம் ரத்து செய்யப்படுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர் மருத்துவரின் அறிவுறுத்தல்படி தன்னை தனிமைப்படுத்துக்கொண்டுள்ளார். இதனால் பிரியங்கா காந்திக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகவில்லை. இருப்பினும் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாக அவர் தேர்தல் பரப்புரைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளை தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்பதூர் மற்றும் கன்னியாகுமரியில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதாக இருந்தது. இந்நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.







