அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும்: பிரதமர்
அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றிய அவர், காந்தி, நேதாஜி, அம்பேத்கர், வேலு நாச்சியார், பாரதியார் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை நினைவுக்கூர்ந்தார். பழங்குடியின தலைவர்களான பிர்சா முண்டா, அல்லூரி சீதாராம ராஜூ உள்ளிட்டோர் சுதந்திர போராட்டத்தை முன்னின்று வழிநடத்தியவர்கள் என்றும் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனைகளின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்வதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க தாம் தன்னையே தியாகம் செய்கிறேன் என்று கூறினார். வேகமான வளர்ச்சியில், புதிய பாதையில் இந்தியா அடியெடுத்து வைக்கின்றது என்று குறிப்பிட்ட அவர், சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில் முக்கிய குறிக்கோள்களை அடைந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு அனைத்து குடிமகன்களும் ஒருங்கிணைந்து பங்காற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை 2047ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற பொதுமக்கள் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் அடுத்த 25 ஆண்டுகளை தேசத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்றும் காலனித்துவ மற்றும் அடிமைத்தனத்தின் சுவடுகளை வேரறுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்றும் தேசத்தின் எழுச்சிக்காக உழைக்க மக்களாக நாம் ஒன்றுபட வேண்டும் என்றும் கூறிய பிரதமர் மோடி, மின்சாரம், தண்ணீரை சேமிப்பது உள்ளிட்ட கடமைகள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர், பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் எனக்கூறி தனது உரையை முடித்தார்.








