இன்று நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேயரின் ஆட்சி பிடியில் இருந்து இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவில் விடுதலை பெற்றது. இந்த விடுதலைக்காக ஏராளமான தலைவர்கள் தங்கள் இன்னுயிரை அளித்துள்ளனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த சுதந்திர தினம் இந்தியாவிற்கு 75வது சுதந்திர தினம் ஆகும். இதை மிக சிறப்பாக கொண்டாட பிரதமர் மோடி கடந்த ஆண்டு முழுவதும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
75வது சுதந்திர தினம்
நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்துவர். தமிழ்நாட்டில், சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ண கொடியை ஏற்றி, மரியாதை செலுத்துகிறார்.
தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்துகிறார்.
மின்னொளியில் ஜொலிக்கும் நகரம்
இதையடுத்து, தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு வகையான விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி கவுரவிக்கிறார். ஜொலிக்கும் தலைநகர் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்து வருகின்றனர்.
சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பழமைவாய்ந்த முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர சென்னை தலைமைச்செயலகம், பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள ரிப்பன் மாளிகை கட்டிடம், சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடங்கள் என பெரும்பாலான இடங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, கண்ணை கவரும் வகையில் தலைநகரமே இரவில் ஜொலித்து வருகிறது.
மூவர்ண கொடி
திரும்பிய திசை எல்லாம் மூவர்ண கொடி பெரும்பாலான இடங்களில் சாலையோர மரங்களில் அலங்கார மின்விளக்குகள் தொங்கவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான கட்டிடங்களில் தேசியக் கொடியின் மூவர்ணம் ஒளிரும் வகையில் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. சென்னை நகரின் முக்கிய இடங்களில் திரும்பிய பக்கமெல்லாம் வண்ண விளக்குகள் ஜொலித்து வருவது, இரவை பகலாக்கும் வகையில் உள்ளது.
பிரதமர் மோடி ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி தேதி நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதன்படி பலரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். மேலும் கடைகள், ஆட்டோக்கள், கார், போன்றவைகளில் மூவர்ண கொடியை பறக்க விட்டுள்ளனர்.
மேலும் வீடுகளில் மூவர்ண வண்ண விளக்குகளால் ஜொலிக்க விட்டுள்ளனர். சிலர் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களையும் விளக்குகளால் ஒளிரச்செய்து 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.








