சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் அந்த வங்கியில் ஏற்கனவே பணிபுரிந்த நபர், நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், செய்தியாளர்கள் மத்தியில் இன்று பேசியதாவது:
13ஆம் தேதி வங்கியில் கொள்ளை நடந்தது. 31.7 கிலோ அடமானம் வைத்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுகுறித்து 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கூடுதல் ஆணையர் அன்பு தலைமையில் 11 குழு அமைக்கப்பட்டது.
முதற்கட்டமாக 18 கிலோ தங்கம் மீட்கப்ட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படை அமைக்கபட்டது. மேலும் இருவர் இருக்கின்றனர். அவர்களை கைது செய்ய உள்ளோம். மீதமுள்ள நகைகள் மீட்கப்பட்டும்.
7 பேர் கொண்ட குழுவினர் கொள்ளை சம்பவத்திற்கான திட்டம் தீட்டியுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனைவரும் ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள். கொள்ளையர்களில் சூர்யா என்ற இளைஞர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2, 3 நாட்களில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்படும்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எளிதில் வங்கியில் கொள்ளை அடித்துத் தப்பிக்கலாம் என்று நினைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். கொள்ளையடிக்க செல்லும்பொழுது இரண்டு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தினர். ஊடகங்களில் வெளியானது போல் துப்பாக்கி எல்லாம் பயன்படுத்தவில்லை. கத்தியை வைத்திருந்தாகத் தெரிகிறது. அதையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. வங்கியில் எச்சரிக்கை மணி ஒலிக்காதது குறித்து விசாரணை நடைபெறும் என்றார் சங்கர் ஜிவால்.








