ஆந்திரா வீரபத்திரர் கோயிலில் வழிபாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி!

ஆந்திர மாநிலம்,  லேபாக்ஷியில் உள்ள வீரபத்ரா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று (ஜன. 16) ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு செல்ல உள்ளதாக தனது…

ஆந்திர மாநிலம்,  லேபாக்ஷியில் உள்ள வீரபத்ரா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று (ஜன. 16) ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு செல்ல உள்ளதாக தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆந்திரா சென்றார். மேலும் அங்குள்ள அனந்தபூர் மாவட்டம்,லேபாக்ஷியில் உள்ள வீரபத்ரா கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். அதுமட்டுமின்றி தெலுங்கில் உள்ள ரங்கநாத ராமாயணத்தின் வசனங்களை கேட்டார்.

https://twitter.com/narendramodi/status/1747122358106853791

அதனைத் தொடர்ந்து வீரபத்ரா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம்’ பஜனை பாடினார். அயோத்தி ராமர் கோயிலின் பிரம்மாண்ட கும்பாபிஷேக விழா நடைபெற இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில், ராமாயணத்தில் சிறப்பு வாய்ந்த லெபாக்ஷிக்கு மோடி சென்றுள்ளது குறிபிடத்தக்கது. சீதா தேவியை கடத்திச் சென்ற ராவணனால் படுகாயமடைந்த ஜடாயு பறவை விழுந்த இடம் லேபாக்ஷி என்று கூறப்படுகிறது.

இன்று மாலை, கொச்சி செல்லும் அவர், 5 மணிக்கு மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் இருந்து விருந்தினர் மாளிகை வரை 1.3 கி.மீ சாலை வழியாக பேரணி நடத்த உள்ளார். அம்மாநிலத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயில் மற்றும் திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயில் ஆகிய இரண்டு முக்கிய கோயில்களுக்கு அவர் செல்ல உள்ளார். நாளை (ஜன. 17) காலை, நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகளின் திருமண விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

பின்னர், ‘சக்தி கேந்திரங்களின்’ பொறுப்பாளர்களான 6,000 பணியாளர்களுடன் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்க உள்ளார். ஒவ்வொருவரும் இரண்டு முதல் மூன்று பூத் அளவிலான பகுதிகளை மேற்பார்வையிடுகின்றனர். கொச்சியில் இருக்கும் போது மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் நாளை மாலைக்குள் டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.