முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமர் மோடியின் தாய் பாசமும், தணியாத மக்கள் நேசமும்

தனது அன்புக்குரிய தாயார் ஹீரா பென் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே அரசு பணிகளில் கவனம் செலுத்தி, மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 

அன்புத் தாயார் ஹீராமா

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த புதன் கிழமை அஹமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா இதயவியல் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்த தகவல் அறிந்த உடனேயே டெல்லியில் இருந்து அஹமதாபாத் விரைந்து சென்ற பிரதமர் மோடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனையிலேயே ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்த பிரதமர் மோடி, மருத்துவர்களிடம் தனது அன்புத் தாயாருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் டெல்லி திரும்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிகிச்சை பலனின்றி மரணம்

இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 100. ஹீரா பென்னின் மறைவை , மேத்தா இதயவில் மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதையடுத்து அவரது உடல் காந்தி நகருக்கு புறநகர்ப் பகுதியில் ரெய்சான் கிராமத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தகவல் அறிந்த உடனேயே டெல்லியில் இருந்து குஜராத் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக தனது தாயார் உடல் வைக்கப்பட்டிருந்த சகோதரரின் வீட்டிற்கு நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார். இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர், தாயாரின் பூத உடலை தோளில் சுமந்து சென்று, மயானத்தில் அவரது சிதைக்கு தீ மூட்டினார். குஜராத் முதலமைச்சர் புபேந்திர படேல், முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.  பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில், “தங்களின் அன்புத் தாயார் ஹீராபாவுடன்  தாங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம் . அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தாயாருடன் தாங்கள் கொண்டிருந்த அழகிய நினைவுகளில் அமைதியும் இளைப்பாறுதலும் பெறுவீர்களாக” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.  கடவுளின் காலடியில் “ஹீராமா”

“ஹீராமா” என்று தனது தாயாரை அன்போடு குறிப்பிடும் பிரதமர் மோடி, தனது அன்புத் தாயாரின் நினைவுகள் குறித்து அவரது படத்தைப் பதிவிட்டு உருக்கமாக டிவீட் செய்துள்ளார். அதில் “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும், என் தாயிடம் உணர்ந்துள்ளேன். 100வது பிறந்த நாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் என் நினைவில் இருக்கிறது” என்று நெகிழ்வாக பதிவிட்டுள்ளார்.

பாசக்கார மகன் மோடி

100வது வயதில் மறைந்த ஹீரா பென்னுக்கு பிரதமர் மோடி உட்பட 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது காலம் முழுவதும் பாசக்கார மகனாகவே இருந்துள்ளார். அவர் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போதும், பிரதமர் பதவியேற்ற பிறகும் தாயாரின் ஆசியைப் பெற தவறியதே இல்லை. தாயாரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் காலைக் கழுவி அவரிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி. தாயின் காலைத் தொட்டுக் கும்பிடுவது, தாயின் காலடியில் அமர்ந்திருக்கும் படம், அவரிடம் பிரதமர் மோடி ஆசி பெறும் படங்கள் மிக பிரபலமானவை. இது மட்டுமன்றி, ஒவ்வொரு முறை குஜராத் சென்றாலும் தனது தாயாரைப் பார்க்காமல் அவர்து டெல்லி திரும்பியதே இல்லை. தனது தாயாரின் தியாக வாழ்வு குறித்தும் தங்களை வளர்த்தெடுக்க அவர் பட்ட துயரங்களையும் பலமுறை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மீளாத் துயரிலும் மக்கள் பணி

அன்புத் தாயாரின் மறைவுத் துயரில் இருந்து மீளாத நிலையிலும், பிரதமராக தனது கடமையில் இருந்து தவறவில்லை மோடி. தனது திட்டமிட்ட பணிகளை அவர் ஒத்தி வைக்கவில்லை. மேற்குவங்கத்தில் முதலாவது வந்தே பாரத் விரைவு ரயில் உட்பட ரூ. 1080 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைக்க அந்த மாநிலத்திற்கு செல்ல இருந்த மோடி, காணொலி காட்சி வாயிலாக இந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, “தனது தாயார் மறைவால், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாத சூழலை சொல்லும் வகையில், சொந்த காரணங்களுக்காக நிகழ்ச்சிக்கு நேரில் பங்கேற்க இயலாததற்கு வருந்துவதாகக் கூறிப்பிட்டார். அடுத்த எட்டு ஆண்டுகளில் ரயில்வே துறை நவீனமயமாகும் என்றும் அதற்காக இதுவரை இல்லாத நிதியை ஒதுக்கி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்” குறிப்பிட்டார்.

மம்தா பானர்ஜி உருக்கம்

முன்னதாக பேசிய மம்தா பானர்ஜி, “உங்கள் தாயார் என்பவர் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தாயார் தான் என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். உங்களுக்கு வலிமையைத் தர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.  தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு உடனே காணொலி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளீர்கள்.  அரசு நிகழ்ச்சிகளை சற்றே ஒத்தி வைத்துவிட்டு, ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்” என்று பிரதமரிடம் மம்தா பானர்ஜி அன்போடு கேட்டுக்கொண்டார்.

“தன்னலமற்ற தலைவர்”

இன்று அதிகாலை 3.30 மணிக்கு மறைந்த ஹிரா பென்னின் இறுதிச் சடங்குகள்,  காலை 10 மணிக்குள் நிறைவடைந்து விட்டது. பிரதமரின் தாயார் மறைவு, பிரதமரே நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய போதிலும், பரபரப்புகள் ஏதுமின்றி, அமைதியாக, மிக எளிமையாக இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தது. ஒரு அன்பு மகனாக தனது கடமையை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இறுதிச் சடங்குகள் நிகழ்ந்த அடுத்த சில மணித் துளிகளிலேயே மக்கள் பணிகளில் வழக்கம் போல் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்களின் ஒருவராக திகழும் பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் இறுதிச்சடங்கில் பின்பற்றப்பட்ட எளிமை நினைவு கூறத்தக்கது.  இத்தகைய செயல்பாட்டில் மூலம் தன்னலமற்ற தலைவராகவும், நாட்டு மக்களின் நலனில் அதிக கவனம் செலுத்தும் தலைவராகவும் பிரதமர் மோடி திகழ்வதை இந்நிகழ்ச்சிகள் வெளிக்காட்டுவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

– ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளி கட்டட விபத்து; 3 பேர் கைது

G SaravanaKumar

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு

EZHILARASAN D

அக்.15க்குள் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: மேயர் பிரியா

G SaravanaKumar