“ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

இந்தியா அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் காந்தியடிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!

மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.

நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.