பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தள மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு ஜனாதிபதி உட்பட மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்று பிரதமர் மோடி நேரில் சென்று பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பஞ்சாப் மாநில கட்சியான சிரோமனி அகாலி தளத்தின் மூத்த தலைவராகவும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். ஐந்து முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்துள்ள இவர், இந்தியாவின் மூத்த தலைவர்களுள் ஒருவர் ஆவார். இவரை பஞ்சாப் மாநிலத்தின் நெல்சன் மண்டேலா என்றேல்லாம் கூட சிலர் அழைப்பார்கள். இப்படி புகழ் பெற்ற தலைவராக அறியப்படும் பிரகாஷ் சிங் பாதல் அவரது 95வது வயதில் நேற்று காலமானார். இவருக்கு கடந்த ஒரு வார காலமாக மூச்சு விடுவதில் சிரமம் நிலவி வந்ததால், மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . அவருக்கு தீவிர சிகிச்சை அங்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பாதலின் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீ பிரகாஷ் சிங் பாதல் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகவும், அவர் இந்திய அரசியலின் மகத்தான ஆளுமை மட்டும் அல்லாது, நமது தேசத்தின் வளர்ச்சியில் பெரிதும் பங்களித்த ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் ஆவார் என்றும், பாதல் பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த மிக சிறந்த மனிதர் எனவும் உருக்கமாக கூறி இரங்கல் தெரிவித்திருந்தார்.
மேலும், அவருடன் பழகிய நாட்கள் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்திருந்த பிரதமர் மோடி, அவர் மீது வைத்திருந்த மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக, இன்று அவர் சண்டிகர் சென்று மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








