”எங்கள் குடும்பத்தையே பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார்” – பிரியங்கா காந்தி ஆவேசம்

அப்பா, அம்மா, சகோதரன் என தனது குடும்பத்தையே பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…

அப்பா, அம்மா, சகோதரன் என தனது குடும்பத்தையே பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாகவும் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் அறிவித்தார்.

இதையும் படியுங்கள் : தகுதி நீக்கம் எதிரொலி : ‘Dis’Qualified MP’ என ட்விட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி

இதற்கு கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் சார்பில் டெல்லி ராஜ்காட் பகுதியில் இன்று ஒரு நாள் முழுவதும் சங்கல்ப சத்யாகிரகம் என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவானது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இருப்பினும் டெல்லி ராஜ்காட் பகுதியில் போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் பேசிய பிரியங்கா காந்தி, “என்னுடைய தந்தையை நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தினார்கள். என்னுடைய சகோதரரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தனர். பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் எனது தாயை பல தருணங்களில் அவமானப்படுத்தி உள்ளனர்.

சமீபத்தில் பிரதமர் எங்கள் குடும்பத்தையே அவமானப்படுத்தி உள்ளார். எங்களின் பெயருக்கு பின்னால் நேரு என சேர்க்க வேண்டும் என்று கூறினார். அப்போது பிரதமர் மோடி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. யாருமே அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவில்லை.

என்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை. நான் உண்மையை கூறுவேன். இந்த நாட்டின் பிரதமர் ஒரு கோழை. ராகுல்காந்தியின் குரலை பிரதமர் மோடி நசுக்கப் பார்க்கிறார். தியாகியின் மகனான எனது சகோதரனை துரோகி என்று சொல்கிறார்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.