1950, மற்றும் 1960 களில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் மட்டுமல்லாமல் கன்னடம், இந்தி, சிங்களம் போன்ற மொழிகளிலும் நடித்த நாட்டியத் தாரகை, கருணாநிதியிடமிருந்து “நாட்டிய செல்வம்” விருது மற்றும் கலைமாமணி விருது பெற்றவர் நடிகை ஈ.வி.சரோஜா.
திருவாரூர் மாவட்டம், எண்கண் கிராமத்தில் வழுவூர் ராமையா பிள்ளையிடம் நடனம் கற்றுக் கொண்ட ஈ.வி.சரோஜா, சென்னை ரசிகர் ரஞ்சனி சபாவில் தனது முதல் நாட்டியத்தை அரங்கேற்றினார். மேலும் மனோன்மணியம் என்ற கதையை நாட்டியமாகத் தயாரித்து, இந்தியாவில் பல நகரங்களில் அரங்கேற்றிப் புகழ்பெற்றவர்.
1952 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த “என் தங்கை” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஈ.வி.சரோஜா. தொடர்ந்து மதுரை வீரன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், புதுமைப்பித்தன், நல்லவன் வாழ்வான், கொடுத்து வைத்தவள் போன்ற படங்களிலும்,சிவாஜி கணேசன் நடித்த “அமரதீபம், தங்கப்பதுமை. படிக்காத மேதை படங்களிலும் நடித்திருந்தார்.
நாட்டியக் கலைஞராக நடித்துப் புகழ்பெற்ற ஈ.வி.சரோஜா, பல படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மதுரை வீரன் திரைப்படத்தில் ஈ.வி.சரோஜா ஆடிப் பாடுவதாக இசைமேதை ஜி.ராமனாதன் அவர்களின் இசையில் அமைந்த, “வாங்க மச்சான் வாங்க வந்த வழியப் பார்த்துப் போங்க” பாடல் இன்றளவும் புகழ்பெற்ற பாடல். முத்துப்போல் பல்லழகி, முன்கோப சொல்லழகி, கத்திபோல் கண்ணழகி, கனிவான பெண்ணழகி என்ற வரிகளுக்கு ஏற்ப வசீகரமான அழகுடன் மிகச்சிறந்த ஆடலழரசியாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்தார் ஈ.வி.சரோஜா.
சக்கரவர்த்தி திருமகள் படத்தில், “ஆடவாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே, அங்கே இங்கே பார்க்குறது என்னாத்தே” என்ற அந்தக்காலத்தில் புகழ்பெற்ற குத்துப்பாடலுக்கும் ஆடியவர் ஈ.வி.சரோஜா தான்.
ஈ.வி.சரோஜாவைப் போலவே எம்ஜிஆரும் ஆடிப்பாடியிருப்பார். பல குத்தாட்டப் பாடல்களுக்கு ஆட்டம் போட்ட ஈ.வி.சரோஜா பாக்யலட்சுமி படத்தில், “காண வந்தக் காட்சி என்ன வெள்ளி நிலவே, கண்டு விட்டக் கோலம் என்ன வெள்ளி நிலவே” பாடலிலும், “காதலெனும் வடிவம் கண்டேன், கற்பனையில் இன்பம் கொண்டேன் மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி” பாடலிலும் “உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் – அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே” என்ற மணப்பந்தல் திரைப்படப்பாடலிலும், வீரத்திருமகன் படத்தில் “அடிச்சிருக்கு நல்லதொரு சான்சு” என்ற பாடலில் எம்.என்.நம்பியாரும் ஈ.வி.சரோஜா உடன் பாடி நடித்திருப்பார்.
குலேபகாவலி படத்தில் சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்க ஜாவாபு” , ஆட வந்த தெய்வம் திரைப்படத்தில் சொட்டு சொட்டுனு சொட்டுது பாரு இங்கே – மழை கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே” என்ற பாடல்களுக்கும் ஆட்டம் போட்டவர் சரோஜா.
1963 ல் வெளியான கொடுத்து வைத்தவள் திரைப்படம் தான் ஈ.வி.சரோஜாவின் கடைசி திரைப்படம்.







