குடியரசுத் தலைவர் வருகை: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தலைவர் வருகையையொட்டி, சென்னையில் 5 ஆயிரம் காவல்துறையினருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னைக்கு இன்று வருகிறார். ஐந்து…

குடியரசு தலைவர் வருகையையொட்டி, சென்னையில் 5 ஆயிரம் காவல்துறையினருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னைக்கு இன்று வருகிறார். ஐந்து நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வரும் அவர், டெல்லியில் இருந்து இன்று காலை 10 மணிக்குப் புறப்படுகிறார். நண்பகல் 12.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.

மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் படத்திறப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் பயன்படுத்தக்கூடிய குண்டு துளைக்காத காரின் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.

சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், குடியரசு தலைவர் சென்னை வருவதையொட்டி, காவல்துறை அதிகாரிகளுடன் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்தாய்வு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், சட்டமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கமாண்டோ படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.