பொங்கல் பண்டிகைக்கு பண்டு சீட்டுகள் கட்டி ஏமாந்த பொதுமக்களிடம், செய்யாறு காவல் ஆய்வாளர் காசு வராது, உங்கள் மேல் கேஸ் தான் வரும் என்று மிரட்டி பேசிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை ஏமாற்றியவர்களின் மீது வழக்கு போடாமல, பொதுமக்களை மிரட்டும் துணை காவல் கண்காணிப்பாளர் வீடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் இயங்கிவருகிறது விஆர்எஸ் சிட்பண்ட்ஸ் என்ற சீட்டு கம்பெனி. இந்த தனியார் நிதி நிறுவனம் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் பண்ட் சீட்டுகளை அறிமுகப்படுத்தியது.
அதன் அடிப்படையில் இந்த சீட்டு கம்பெனியில் மாதாமாதம் பணத்தை கட்டும் பொது மக்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விலை உயர்ந்த பரிசு பொருட்களை வழங்குவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை உள்ளடக்கிய நோட்டீஸ்களை அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது.
அவற்றை நம்பி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி, ஆரணி, போளூர், வெம்பாக்கம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இயங்கி வரும் சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தங்களுடைய பணத்தை முதலீடு செய்து சீட்டுகளை கட்டி வந்துள்ளனர்.
மேலும் பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து, இந்த சீட்டு கம்பெனி நிறுவனத்திற்கு 15 நபர்களை சீட்டு கட்ட வைத்தால், ஒரு சீட்டு இலவசம் என்று ஏஜெண்டுகளை நியமனம் செய்து, அந்த ஏஜெண்டுகளை நம்பி பல்வேறு தரப்பு மக்கள் தங்களுடைய பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்றும், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் சீட்டு கட்டிய நபர்கள் ஒருவருக்கு கூட பொருட்கள் வழங்காமல் வி ஆர் எஸ் சீட்டு கம்பெனி நிறுவனம் ஏமாற்றி உள்ளது. இதனால் பணத்தைக் கட்டி ஏமாந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தங்களிடம் பணம் வாங்கிய ஏஜென்ட்களை முற்றுகையிட்டு பணம் மட்டும், பொருட்களைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் இந்த முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து, ஏஜெண்டுகளாக பணியாற்றி வருபவர்கள் அனவைரும் சம்பந்தப்பட்ட வி ஆர் எஸ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பணம் கேட்டு போராட்டம் நடத்தினர். தாங்கள் கட்டிய பணத்திற்கான ரசீதுகளை தீ வைத்து செய்யாறில் கொளுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு நகர காவல் துறை போலீசார் சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று வி ஆர் எஸ் நிதி நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் பண்ட் சீட் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றிய வி ஆர் எஸ் நிதி நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்தி , இது தொடர்பாக, சரியான விசாரணை நடத்தப்பட்டு, உரிய நேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பொறுமையாக இருங்கள். அதையும் மீறி நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், காசுக்கட்டி ஏமாந்த உங்களுக்கு காசு வராது, கேசு (வழக்கு) தான் வரும் எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்தி பேசிய இந்த நிகழ்வு தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து ஏமாற்றிய வி ஆர் எஸ் நிதி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யாமல், பணத்தைக் கட்டி ஏமாந்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்வதாக துணை காவல் கண்காணிப்பாளர் பேசிய வீடியோவால் ஏமாந்த வாடிக்கையாளர்கள் மிகவும் அதிர்ச்சடைந்துள்ளனர்.










