பரந்தூர் விமான நிலையம் – டிட்கோ விளக்கம்

சென்னைக்கு அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ள நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தின் எல்லை இறுதி செய்யப்பட்டவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவலை அந்நிறுவனம்…

சென்னைக்கு அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ள நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தின் எல்லை இறுதி செய்யப்பட்டவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவலை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான ஆலோசகர் தேர்விற்கு சர்வதேச முன்மொழிவிற்கான ஒப்பந்தப்புள்ளி 2022 டிசம்பர் 5 ஆம் தேதி கோரப்பட்டிருந்தது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில், சென்னைக்கு அருகில் பரந்தூரில் பசுமை விமான நிலையத்திற்கான விரிவான தொழில்நுட்ப-பொருளாதார அறிக்கையும் தயாரிக்கும் பணியும் கேட்கப்பட்டிருந்தது.

பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான ஆலோசகர் தேர்விற்கான சர்வதேச முன்மொழிவு – ஒப்பந்தப் புள்ளி 06.01.23 அன்று திறக்கப்பட்டது. பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகராக 16 சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 நிறுவனங்கள் 191 சந்தேகங்களை எழுப்பிய நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும் ஒப்பந்தபுள்ளியை இறுதி செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நீட்டிப்பும் செய்துள்ளது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பான முன் ஏல சந்திப்பில், அந்த பகுதி மக்களின் கருத்துகள் தொடர்பாக தொழில்நுட்பம் சார்ந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தேகங்களும்… விளக்கமும்…

இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளதா? இடத்தின் உரிமை நிலை என்ன? விமான நிலையத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் அளவை உறுதிப்படுத்தவும்…

பசுமை விமான நிலையத்திற்காக சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூரில் சுமார் 5000 ஏக்கர் மாநில அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. விமான போக்குவரத்துத்துறையின் வழிநடத்தல் குழுவிடம் (Steering Committee) இட அனுமதி விண்ணப்பத்தை டிட்கோ சமர்ப்பித்துள்ளது.

இடத்தின் எல்லைகள் TIDCOவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நிலம் உரிமை கோரல் அற்றது என்பதையும் தெளிவுபடுத்தவும்…?

நிலத்தின் எல்லைகள் தற்போது வரை நிர்ணயிக்கப்படவில்லை.

முன்மொழியப்பட்ட விமான நிலைய இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான வானிலை, மக்கட்தொகை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதாரத் தரவுகளில் ஏதேனும் TIDCO விடம் இருக்கிறதா?

டிட்கோவிடம் முந்தைய ஆய்வு அறிக்கைகள் அல்லது கணக்கெடுப்பு தரவு எதுவும் இல்லை.

திட்டத்திற்கான இடம் ஏற்கனவே TIDCOவால் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலோசகருக்கான பணியில் இடம் தேர்வு இல்லை?

ஆம். பசுமை விமான நிலைய மேம்பாட்டிற்காக பரந்தூரை ஏற்கனவே டிட்கோ நிறுவனம் இறுதி செய்துள்ளது.

ஒப்பந்தப்புள்ளியில் சிறப்பு திட்ட நோக்க நிறுவனம் அமைப்பதற்கான எந்தத் தேவையையும் குறிப்பிடவில்லை?

சிறப்பு திட்ட நோக்க நிறுவனம் என்பது புதிய பசுமை விமான நிலையத்தை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்படும் நிறுவனம் மற்றும் இந்த பணியுடன் தொடர்புடையது அல்ல.

நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை யார் செய்து முடிப்பார்கள்?

அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்திரட்டு முறையில் (LPS) நிலங்களை தருவார்கள்.

ஆவணங்களைத் தயாரித்து சட்டப்பூர்வ அனுமதிகள், ஒப்புதல்களைப் பெறுதல் குறித்து…?

தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களைத் தயாரித்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு TIDCO விற்கு ஆலோசகர் உதவ வேண்டும். மத்திய-மாநில அரசுத் துறைகள், அதிகாரிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ நிறுவனங்களில் பசுமை விமான நிலையத்தின் மேம்பாட்டிற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கு உதவ வேண்டும்.

2023-24 நிதியாண்டில் தொடங்கி 5 ஆண்டு இடைவெளியில் 2069-70 நிதியாண்டு வரை எதிர்கால பயணிகள், விமானம் மற்றும் சரக்குகள் போக்குவரத்து கணிப்புகள் திட்டத்தின் நோக்கத்திற்காக அல்லது வேறு ஏதேனும் நிதியுதவிக்காக பயன்படுத்தப்படுமா?

போக்குவரத்து ஆய்வுகள் எதிர்கால போக்குவரத்து தேவை மற்றும் விமான நிலையத் திறன் திட்டமிடல் மற்றும் நிதியுதவிக்கான வளர்ச்சி சூழ்நிலையை கண்டறிய பயன்படுத்தப்படும்.

பசுமை விமான நிலையம் சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் அமையவுள்ளதை புரிந்துகொள்கிறோம். மதிப்பாய்விற்கு இடத்தின் ஒருங்கிணைப்புகள் குறித்த தகவலை வழங்கவும்…

திட்டத்தின் சரியான இடம் ஒப்பந்தப்புள்ளி எடுப்பவரிடம் பகிரப்படும். பணிக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்கு வேறு எந்த நிறுவனங்களையும் அணுகுவதற்கு ஆலோசகருக்கு டிட்கோ உதவி செய்யும்.

  • இலா. தேவா இக்னேசியஸ் சிரில், நியூஸ்7 தமிழ்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.