பாகுபலி 2, கேஜிஎஃப் 2 போல பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 1000 கோடி வசூலைப் பெரும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கும் வெளியானது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.75 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதன் விளைவாக 300 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்துள்ளது. கூடுதலாக வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விக்ரம் படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் முந்தும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க பொருளாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
நமது நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன், “Topic card விக்ரம் படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் விரைவில் முந்தும். முதல் முறையாக வெளிநாடுகளில் பொன்னியின் செல்வன் அதிக வசூலை குவித்து வருகிறது. இத்திரைப்படம் 400 முதல் 500 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி, தெலுங்கு பாக்ஸ் ஆஃபிசைத் தொடர்ந்து தான் தமிழ் சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் வரும். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரூ.1000 கோடி வசூலைப் பெரும். ஒரு தயாரிப்பாளராக சர்ச்சைகளை வரவேற்கிறேன். சர்ச்சைகள் வந்தால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். எதை காண்பிக்க வேண்டுமோ அதை மணிரத்னம் காட்டியுள்ளார். வேண்டுமென்றே யாரும் சர்ச்சைகளை எழுப்புவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.







