இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மிலாது நபியையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மிலாது நபி இந்தியாவில் அக்டோபர் 8ம் தேதி மாலை தொடங்கி அக்டோபர் 9ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபி, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவுகூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய மக்கள், இரக்கத்தையும், கருணையையும் நினைவூட்டும் நாளாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- மிலாது நபி திருநாளை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு என்னுடைய உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அமைதியை உலகெங்கும் பரப்பிய முகமது நபி பிறந்த இத்திருநாளை நினைகூர்ந்து போற்றி கொண்டாடி மகிழ்வோம். அனைத்து மக்களும் இத்திருநாளை மகிழ்வுடனும், பரஸ்பர அன்புடனும் கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார்.
இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நபிகள் நாயகம் பிறந்த நன்னாளான மிலாதுநபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த்த வாழ்த்துக்கள். நபிகள், கோபம், பொறாமை, புறம் பேசுதல் ஆகியவற்றை அறவே துறந்து, உயரிய பண்புகளுடன் வாழ்வதற்கான சிந்தனைகளை மனித சமுதாயத்துக்கு சொன்னவர்.
ஏழை, எளியவர்களுக்கு உணவளியுங்கள், என்ற மனிதநேயத்திற்கு சொந்தக்காரர். நபிகளின் போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைபிடிக்க வேண்டியவை மட்டுமின்றி, அவை போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவை என்று குறிப்பிட்டுள்ளார்.








