புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு – முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்….!

புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் ஆண்டு தோறும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு டெண்டர் விட்டு, இறுதி செய்யப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மாலை 4 மணிக்கு சண்முகாபுரத்தில் உள்ள ரேசன் கடையில் நடைபெற இருந்த நிலையில் திடீரென விழா தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி திலாஸ்பேட்டையில் உள்ள நியாவிலைக்கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4-கிலோ பச்சரிசி, 1-கிலோ நாட்டு சக்கரை, 1-கிலோ சமையல் எண்ணெய், 1-கிலோ பச்சை பருப்பு, 300மி.லி நெய் அகிய 5-பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.