அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குகள்; நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மனுதாக்கல்

அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு…

அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை அடுத்து வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையை புறக்கணிக்க அரசு முடிவெடுத்துள்ளது, விசாரணை நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை போன்றது எனத் தெரிவித்துள்ளார்.

புகார்தாரர்கள் தெரிவித்த 14 குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்ற ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை மீறி வழக்குப்பதிவு செய்ததற்கான காரணம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் வேலுமணி மீது பதிவான இரு வழக்குகளை எதிர்த்து தனி நீதிபதி முன்பாகத்தான் வழக்கு தொடர்ந்து வாதிட வேண்டுமென்றும்,
இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு உகந்தல்ல என வாதிடப்பட்டது.

வேலுமணி தரப்பில் புகாரில் முகாந்திரம் இல்லை என்கிற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை எனவும், தணிக்கை குழு அறிக்கையில் தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் கூறப்படாத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்
வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.