கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், சம்பவத் தன்று பணியில் இருந்த காவலாளி கிருஷ்ண பகதூரை விசாரிக்க தனிப்படை போலீசார் நேபாளம் விரைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் மறுவிசாரணை ஊட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 17ம் தேதி முதல் போலீசார், விசாரணைக்கு தேவைப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
விசாரணையை தீவிரப்படுத்த ஊட்டி பழைய எஸ்.பி. அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில், டி.ஐ.ஜி. முத்துசாமி, ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி.,க்கள் சந்திரசேகர், சுரேஷ், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் வழக்கு குறித்து நேற்று முன் தினம் தீவிர ஆலோசனை நடத்தினர்.
இந்த வழக்கில் இதுவரை 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அந்த எஸ்டேட்டில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பணியில் இருந்தவரும், முக்கிய சாட்சியாகக் கருதப்படுபவருமான காவலாளி கிருஷ்ண பகதூர், தற்போது நேபாளத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், அவரை விசாரணைக்கு அழைத்து வர உதவி காவல் ஆய்வாளர் தலைமை யில் மூன்று பேர் கொண்ட குழு நேபாளம் விரைந்துள்ளனர்.








