டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய மாணவிகள் மீது போலீசார் தாக்குதல்: டிடிவி தினகரன் காண்டனம்!

அரியலூரில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராடிய மாணவிகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்களுடன் இணைந்து போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்பும், கடமையுமிக்க காவல்துறையினரே, சமூக பொறுப்புடனும், துணிச்சலுடன் குரல் எழுப்பிய பள்ளி மாணவிகளிடம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தியிருப்பதும், அவர்களை குற்றவாளிகளை போல சித்தரித்திருப்பதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அணுகுமுறையாகும்.

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருபுறம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிவிட்டு, மறுபுறம் பெண்களுக்கு நாள்தோறும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது தவெக அரசின் அளவுக்கு மீறிய அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.

எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.