“மாற்றம்” என்ற பெயரில் மக்களுக்கு தினசரி ஏமாற்றம்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தவிக்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தஞ்சை பேராவூரணி அருகே கோவில் திருவிழாவிற்கு சென்ற 16 வயது சிறுமியை நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதறச் செய்கின்றன. பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் நலத்துடன், இக்கொடுமையை கடந்து வர இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல, முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து பெண்களின் பாதுகாப்பிலோ, சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கிலோ, சமூகக் கட்டமைப்பிலோ எவ்வித முன்னேற்றமும் நிகழவில்லை. பெண்கள் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்ட “சிங்கப்பெண்கள் சிறப்பு பாதுகாப்பு படை”, முறையான வழிகாட்டுதல் இன்றி எங்கே எந்த மூலையில் முடங்கிக் கிடக்கிறது என்று தெரியவில்லை. பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.

ஆனால், அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத முதல்வரும் அவரது அமைச்சர்களும், சாலைகள் முழுவதும் வெற்று விளம்பரங்களை நிரப்புவதிலும், சமூக வலைத்தளங்கள் முழுவதும் விதவிதமான ரீல்ஸ்களைப் பரப்புவதிலும் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடு. “மாற்றம்” என்ற பெயரில் மக்களுக்கு தினசரி ஏமாற்றத்தை அளித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், தனது நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு மொத்தமாகப் பதவி விலகிவிடலாம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.