இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் பைப் குண்டு வைத்ததாக 2 பேர் கைது

திருநெல்வேலி தாழையூத்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பைப் வெடிகுண்டு வைத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து சங்கர் நகரில், இந்தியா சிமென்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும்…

திருநெல்வேலி தாழையூத்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பைப் வெடிகுண்டு வைத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து சங்கர் நகரில், இந்தியா சிமென்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா பரவலை அடுத்து, குறைந்த அளவு தொழிலாளர்களை வைத்தே தொழிற்சாலை நடந்து வருவதாகவும் தொழிலாளர்கள் பலரை, நிர்வாகம் பணி நீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பணிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில் இரண்டு பைப் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட ஆலை நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததனர். அதன்படி தாழையூத்து காவல் துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர். மேலும் தொழிலாளர்களில் யாரோ, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில்,வெடிகுண்டு வைத்ததாக ஆறுமுகம் மற்றும் சலீம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.