சிமெண்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்

தாளையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட் ஆலை வளாகத்தில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை தாளையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும்…

தாளையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட் ஆலை வளாகத்தில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை தாளையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

கொரனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் தொழிற்சாலைகள் பல இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் மிகக் குறைந்த அளவே வைத்தே உற்பத்தி செய்து வருகின்றனர். நெல்லை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரை, நிர்வாகம் பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. பலரை குறைந்த நாள் பணிக்கு வருமாறும் நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை பணிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில் இரண்டு பைப் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட ஆலை நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததனர். அதன்படி தாளையூத்து காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை காவல்துறையினர் செயலிழக்க செய்தனர். மேலும் தொழிலாளர்களில் யாரோ, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.