ரஷ்யாவில் மருத்துவம் படித்து வரும் மாணவர்களிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணி, என்பவரின் மகள் மஞ்சுதர்ஷிணி, ரஷ்யாவின் சிம்பர்போலில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். ரஷ்ய நாட்டு விதிமுறைகளின்படி கல்லூரி கட்டணத்தை ரஷ்ய ரூபிளாக செலுத்த வேண்டும். இதனால் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த பொன்னுசெல்வம், கவியரசை அணுகியுள்ளனர்.
அவர்கள் போரூர் மாங்காடு எஸ் எஸ் நகரை சேர்ந்த குழந்தை அந்தோணி ராஜா மூலம் பணத்தை ரஷ்ய ரூபிளாக மாற்றி தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி கவியரசு மூலம் சுமார் ரூ.3,53,000 அனுப்பியுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் பணத்தை தராமல் அவர் காலம் தாழ்த்தியுள்ளார்.
இதுதொடர்பாக பொன்செல்வம் மற்றும் கவியரசுவிடம் ராணி கேட்டபோது குழந்தை அந்தோணி ராஜாவிடம் பணம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அவர் பலரிடம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ராணி அளித்த புகாரின் பேரில் குழந்தை அந்தோணி ராஜாவை ஆவடி பெருநகரக் காவல், மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.







