சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மலர்விழி 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்தார். 2008 ஆம் ஆண்டு சென்னையில் வணிகவரித் துறையில் இணை ஆணையராக பணியாற்றினார். இதனையடுத்து விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த அவருக்கு ஐஏஎஸ் கேடர் வழங்கப்பட்டு, பின்னர் 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய மலர்விழி, 2015-17 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினார். 2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தருமபுரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த மலர்விழி தற்போது, சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் தருமபுரி ஆட்சியராக மலர்விழி இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமிநாசினி கொள்முதலில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருவூல காலனியில் உள்ள அவரது வீட்டில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கிருஷ்ணன் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








