மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதற்கட்ட வாக்குபதவு நடைபெறவுள்ள நிலையில் பங்களாதேஷ் சென்றுள்ள பிரதமர் மோடி நடைபெற்றுவரும் இருமாநில தேர்தல்களில் இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மேற்குவங்கம், அசாம் மாநிலங்கள் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மேற்குவங்கத்தில் உள்ள மொத்த 294 தொகுதிகளில் முதற்கட்டமாக 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி காட்சிகள், பாஜக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. மேற்கு வங்கத்தில் பாஜக 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதன்காரணமாக ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
அதேபோல் 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு, முதல் கட்டமாக 47 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாமில் ஆளும் பாஜக 39 தொகுதிகளிலும் அசாம் கணபரிஷத் 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. மேலும் காங்கிரஸ் 43 தொகுதிகளிலும் அதன் கூட்டணியில் ஆர்ஜேடி, அஞ்சலிக் கணமோர்ச்சா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக முதல் முறையாக அசாமில் வெற்றிபெற்றது. இதன்காரணமாக இம்முறையும் அசாமில் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள கடும் முயற்சிகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் பங்களாதேஷ் சென்றுள்ள பிரதமர் மோடி மேற்குவங்கம், அசாமில் நடைபெற்றுவரும் தேர்தலில் இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும் என தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார்.







