சைதாப்பேட்டை தொகுதி மக்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவனாக தன்னை பார்ப்பதாக அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வரும் 4 ஆம் தேதியுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளரான சைதை துரைசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கொத்தவால்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய அவர், சாதி, மத அரசியலை கடந்து சைதாப்பேட்டை தொகுதி மக்கள் தன்னை குடும்பத்தில் ஒருவனாக பார்ப்பதாக குறிப்பிட்டார். மனிதநேய சிந்தனையோடு தான் பணியாற்றி வருவது இப்பகுதி மக்களுக்கு தெரியும் என்று கூறிய சைதை துரைசாமி எந்த வேறுபாடும் இன்றி மக்கள் தன்னை ஆதரிக்கிறார்கள் எனக் கூறினார்.







