நாளை மாலை பிரதமர் சென்னை வருகையையொட்டி, சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காக நாளை மாலை சென்னை வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தரவுள்ளார். அங்கு சுமார் 2 மணி நேரம் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மீண்டும் சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.
சென்னை வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 22 ஆயிரம் போலீஸார் இன்று இரவு முதல் நாளை இரவு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வரும் பாதை முழுவதும் பிரதமரின் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு சென்னை காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தி உள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் பெரியமேடு பகுதி முழுவதும் குறிப்பிட்ட நேரத்திற்கு கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லாட்ஜ்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
22,000 காவலர்களில் சென்னை காவல் துறை காவலர்கள், போக்குவரத்துக் காவலர்கள், ஆயுதப் படை காவலர்கள், சிறப்பு காவல் படை உள்ளிட்ட அனைத்துத் தரப்பு காவலர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.








