மேற்கு வங்கத்தை சீர் குலைத்த மமதா பானர்ஜி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பத்தாண்டு கால ஆட்சியில், மேற்கு வங்கத்தை மமதா பானர்ஜி சீர் குலைத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டங்கள் தேர்தல்…

பத்தாண்டு கால ஆட்சியில், மேற்கு வங்கத்தை மமதா பானர்ஜி சீர் குலைத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டங்கள் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பர்தமான் என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

அப்போது பேசிய பிரதமர், மமதா பானர்ஜியின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். அதன் காரணமாகவே, பட்டியல் சமூக மக்களை பற்றி, அவர் கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மமதாவின் பேச்சை கேட்டு, அம்பேத்கரின் ஆன்மா வேதனைப்பட்டிருக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் கொச்சைப்படுத்தாதீர்கள் எனத் தெரிவித்த நரேந்திர மோடி, அடுத்த 4 கட்ட தேர்தல்களை பயன்படுத்தி, மமதா பானர்ஜியை மக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற உள்ளதாகக் குறிப்பிட்டார். பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த மமதா பானர்ஜி, கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை சீர் குலைத்துவிட்டதாகவும் பிரதமர் குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.