மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமானது (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கொண்டுவரப்பட்டது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் ‘விக் ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (விபி-ஜி ராம்-ஜி)’ என்ற புதிய புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாக, ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு 125 நாள் வேலை வழங்குவது திட்டத்திற்கான நிதிசுமையை மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்வது ஆகியவை உள்ளன.
ஆனால் இந்த மசோதாவானது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை சீர்குலைப்பதாகவும், மாநில உரிமைகளை பறிப்பதாகவும் எதிர்கட்சிகள் சார்ப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் திட்டத்திலிருந்த காந்தியின் பெயர் நீக்கப்பட்டதும் எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் விமர்சனத்துள்ளானது.
தொடர்ந்து இந்த மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தைலவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விபி-ஜி ராம்-ஜி மசோதாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.







